திரைக்கலைஞர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ‘ஒத்த செருப்பு’ இந்தோனேசிய மொழியில் ரீமேக்காகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இயக்குநரும், திரைக்கலைஞருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் முழுக்க ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே தோன்றும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு, பார்த்திபன் நடித்து அவரே இயக்கியிருந்தார். இதுவரை மேற்கொள்ளப்பட்டாத புதுவகையான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படம், பலரின் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்றது. விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், ஒன்றிய அரசின் தேசிய விருதையும் வென்றது. மேலும், ஆஸ்கர் விருதுப்பட்டியலிலும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசியாவின் பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்பட்ட உள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும், பஹாசா மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை ஒத்த செருப்பு திரைப்படம் பெற்றுள்ளது. இது சினிமா ரசிர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.